பாதிக்கப்பட்ட ஆசிரியை பேட்டி திருநெல்வேலி: பாளையங்கோட்டை வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், ஆசிரியர் பயிற்றுநராக பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
பின்னர் விடுப்பு முடிந்தவுடன் மீண்டும் பணியில் சேர சென்றபோது, உதவி திட்ட அதிகாரி சிவராஜ் மற்றும் மேற்பார்வையாளர் செண்பகாதேவி இருவரும் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிரியையின் வருகை பதிவேட்டை மறைத்து வைத்து, அவரை பதிவேட்டில் கையொப்பம் போட விடாமல், அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த ஆசிரியை முறைப்படி பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டு, கடந்த 11 மாத காலமாக தனக்கு வேலையும், சம்பளமும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் முறையிட்ட போதும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் வேதனை தெரிவிக்கிறார்.
இந்நிலையில், இன்று (நவ.6) அந்த ஆசிரியை தனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது திடீரென அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பின்னர் இது குறித்துப் பாதிக்கப்பட்ட ஆசிரியை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை மேற்பார்வையாளர் செண்பகாதேவி அடிக்கடி ரேக்கிங் செய்து துன்புறுத்தியதாகவும், அது குறித்து உயரதிகாரியிடம் புகார் அளித்த காரணத்தால் தன்னை இடமாறுதல் வாங்கிவிட்டுச் செல்லும்படி கட்டாயப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது மருத்துவ விடுப்பு காலம் முடிந்த பிறகும் கூட, தற்போது வரை தன்னை பணியில் சேர விடாமல் தடுப்பதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்த பிறகும் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் தான் கணவனை இழந்து வாழ்வதால் இவருடைய வருமானத்தில் தான் குடும்ப செலவுகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், ஆனால் 11 மாதங்களாகச் சம்பளம் பெறாத காரணத்தினால். குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்தோடு வாழ்ந்து வருவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
மாணவர்களை பல்வேறு துறைகளில் திறம்படச் செயல் பட அடிப்படையாக இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் ஆசிரியர் பயிற்றுநரை, அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பணி செய்ய விடாமல் கொடுமை செய்வதாக எழுந்துள்ள புகார் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "பெண் என்பதால் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விட்டு வைக்கிறேன்" - அண்ணாமலை ஆவேசம்!