திருநெல்வேலி:அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு, நெல்லை மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாநகர காவல் துறை சார்பில் காவல் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆளுநருக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள நாட்டில் பொது சிவில் சட்டம், சமூக நீதி தேவை என்பதற்காகவே கொண்டு வரப்படுகிறது.
பொது சிவில் சட்டம் ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என ஒரு சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சரத் பவார் போன்றோர் கூட பொது சிவில் சட்டத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
இந்த காலகட்டத்திற்கு அவசியமானது, பொது சிவில் சட்டம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தைக் கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆன்மிகம் இந்தியாவை வளர்க்கிறது. அனைத்து மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மலைவாழ் மக்கள் இன்னும் முழுமையாக முன்னேறவில்லை.