"நீரின்றி அமையாது உலகு" என்பது வான்புகழ் பாடிய வள்ளுவனின் வாக்கு! அது வெறும் வாக்கு மட்டுமல்ல; ஓர் வாழ்வியல் உண்மையும்கூட. நீரின்றி நிலத்தைப் பண்படுத்தல் நிகழாது. நிலமின்றி உணவு உற்பத்தி இல்லை. உணவு உற்பத்தியின்றி உயிர்கள் வாழ்வதில்லை. நீராலேயே இவ்வுலகு அமைந்ததிருக்கிறது. வானம் பார்த்த வறண்ட பூமியில் வேளாண்குடி மக்களின் கடைசி நம்பிக்கை கிணறு.
இந்தியாவின் முதுகெலும்பாகப் போற்றப்பட்ட விவசாயத்திற்குள்பட்ட அமைப்புசாரா தொழில்கள் ஏராளம். அதில், கிணறு வெட்டும் பணி முதன்மையானதாகும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப்பளவு கொண்ட புன்செய் - நன்செய் வேளாண் நிலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிணற்று பாசனத்தின் மூலமாக விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. அத்தகைய கிணறு வெட்டும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுப் பரவும் அசாதாரண சூழலில் அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் ஒரே வாய்ப்பாக உள்ளது. இருப்பினும் இந்த நீண்ட ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் பலர் பல்வேறு மாவட்டங்களில் சிக்கித் தவித்துவருவதையும் அறிய முடிகிறது.
விவசாயத்திற்குள்பட்ட அமைப்புசாரா தொழிலான கிணறு வெட்டும் தொழிலிலுக்குப் பெயர்பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளை அணுகி அவர்களுக்கு கிணறு வெட்டி கொடுப்பது, கிணற்றைச் சுத்தம் செய்துகொடுப்பது ஆகிய வேலைகளைச் செய்துவருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலியில் தங்கி கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டுவந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலைக்குச் செல்லமுடியாமல் சுத்தமல்லி அருகே தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில் முடங்கிக் கிடக்கின்றனர்.
வேலையிழந்து தவிக்கும் இவர்கள் உணவிற்கும் திண்டாடிவருகின்றனர். தொழிலாளர்களின் நிலைமை குறித்து தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலையடுத்து அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு வழங்கிய நிவாரணப் பொருள்கள் போதவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தொழிலாளி செல்லமுத்து கூறுகையில், “கிணறு வெட்டும் வேலையைச் செய்துவருகிறோம். இந்த ஒரு மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறோம். ஊரடங்கு உத்தரவால் எங்கும் செல்ல முடியவில்லை வேலையில்லாமல் சும்மாதான் இருக்கிறோம்.