திருநெல்வேலி மாவட்டம் கருப்பந்துறையில் ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் கோயில் உள்ளது. அதன் முன்புள்ள ஆற்றங்கரை ஓரத்தில் இன்று இரண்டு பைகளில் சாமி சிலைகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
உடனடியாக இது குறித்து அவர்கள் நெல்லை ஜங்சன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த பைகளை சோதனை செய்தபோது அதில் முருகன், விநாயகர் சிலைகள் இருப்பது தெரியவந்தது.
அருகில் கோயில் இருப்பதால் சிலைகள் அக்கோயிலுக்குச் சொந்தமானதா என காவல் துறையினர் கோயில் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தியதில், அவை இந்த கோயில் சிலைகள் இல்லையென தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் சிலையை திருடிவிட்டு பயத்தில் இங்கே வீசிச் சென்றார்களா அல்லது அருகில் உள்ள பிற கோயில்களிலிருந்து ஏதாவது காரணத்திற்காக சிலைகள் இங்கே கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து நெல்லை மாவட்ட இந்து முன்னணியினர் கோயில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறுகையில், "கருப்பந்துறை கோயில் ஆற்றங்கரை பகுதியில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ சிலைகளை வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
காவல் துறையினர் இது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யார் கொண்டு வந்து வைத்தார்கள் என்பது மர்மமாக உள்ளது. பொதுவாக சிலைகள் களவு என்றால் விநாயகர் சிலைகள்தான் ஆங்காங்கே களவு போகும், ஆனால் இங்கு முருகன் சிலையும் வீசப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஆழமான உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கோயம்புத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கோயில் சிலைகள் தகர்க்கப்பட்டு கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இங்கே சிலைகள் வீசப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. எனவே இதன் பின்னணியில் யாரும் திட்டமிட்டு செயல்படுகிறார்களா என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்து ஆலயங்களும் சிலைகளும் தாக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.