திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இறகுப் பந்து போட்டியைத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, "தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது குறித்த கேள்விக்கு, யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சர் பதவி கொடுக்கலாம். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். ஆனால், பதவி கொடுத்த பிறகு தான் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது தெரியும் என்றார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக 4 வழிச்சாலை, உள்ளிட்ட போக்குவரத்து வசதியை, உட் கட்டமைப்பு வசதிகளைப் பிரதமர் மேம்படுத்தி உள்ளார். இதனால், பல தொழில்கள் மேம்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். நாடு முழுவதும் 130 விமான நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
விமான நிலையங்கள் தனியாருக்கு நிர்வாகத்திற்கு விடப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனியாருக்கு விமான நிலையங்களைக் கொடுப்பது தவறில்லை என்றும் அரசாங்கம் தொழில் செய்யக்கூடாது அரசாங்கம் தொழில் செய்தால், அதில் லாபம் கிடைக்காது அவ்வாறு அரசாங்கம் எந்த தொழில் செய்தாலும் நஷ்டத்தில் தான் முடியும். தொடர்ந்து, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை வைத்துக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் இப்போது கலந்து கொள்ளவில்லை என்றும் பின் நாட்களில் ராமர் கோயிலுக்குச் செல்வோம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதில் அவர் பிரதமராகக் கலந்து கொள்கிறார். அதில், தவறு ஏதுவுமில்லை. ஆகம விதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது என்றும் தமிழகத்தில் ஆகம விதிகள் ஒரு மாதிரியும், கேரளாவில் வேறு மாதிரியும், வட மாநிலங்களில் மற்றொரு மாதிரியும் ஆகம விதிகள் உள்ளது என மந்திரங்களை உச்சரித்தபடி தெரிவித்தார்.
இதையும் படிங்க:துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்..!