திருநெல்வேலி:கரோனா பெருந்தொற்று காலத்தில் இணையப் பயன்பாடு பெருகியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்குப் பாடங்களை இணையவழியில் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளன.
இணையவழியில் மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள சிக்கல்கள், பயன்கள் குறித்து ஒருபுறம் விவாதம் நடந்துகொண்டிருக்க இந்தியாவின் தென்மூலையில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு பகுதியில் மாணவி ஒருவர் இணைய வழிக் கல்வியைப் பெறவும், இணையவழித் தேர்வுகள் எழுதவும் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, இஞ்சிகுழி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கானி இன பழங்குடி மக்கள் வசித்துவருகிறார்கள்.
செல்போன் சிக்னலுக்காக 16 கி.மீ. நடைபயணம்
இந்த கானி சமூகத்தைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவி, பாபநாசம் பகுதியில் இளங்கலைப்பட்டம் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தற்போது, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவதால், இவர் தேர்வு எழுத தனது ஊரிலிருந்து 16 கி.மீ. தூரம் கீழே இறங்கிவரும் சூழல் உள்ளது.
சேர்வலாறு பகுதியில் செல்பேன் சிக்னல் அறவே கிடைக்காது. ஆகையால், தனது ஆன்லைன் தேர்வுகளை 16 கி.மீ. தூரம் நடந்துவந்து லோயர் கேம்ப் பகுதியில் சிக்னல் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து எழுதுகிறார்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் எந்த விலங்கு எப்போது எதிரே வரும் எனத் தெரியாத நிலையில், தனது தந்தையையோ அல்லது தனது அண்ணனையோ உடன் அழைத்துவருகிறார் ரம்யா.
கல்வி என்னும் பெருங்கனவு
ரம்யா நிம்மதியாகத் தேர்வு எழுத வேண்டும் என்று தங்களது வேலைகளை விட்டு அவருடன் லோயர் கேம்பில் தேர்வு எழுதி முடிக்கும்வரை காத்திருந்து திரும்ப அழைத்துச் செல்கின்றனர் ரம்யாவின் அண்ணணும் தந்தையும். இப்பகுதியிலேயே கல்லூரி படிப்பை படிக்கும் மாணவி ரம்யாதான். இவர், தன்னைப்போல் பள்ளி மாணவர்கள் சிலரும் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கலை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கிறார்.
மேலும், "பெரும் கனவுடன் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு கல்வியைப் பெறுவதில் பல்வேறு தடைகள் இருக்கின்றன. குறிப்பாக செல்போன் சிக்னல் கிடைக்க எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்போன் டவர் வைக்க சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்க உதவும் வகையில், குறைந்த அதிர்வெண் கொண்ட செல்போன் டவர்களையாவது அமைக்க முன்வர வேண்டும்" என்கிறார்.