திருநெல்வேலி:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா (Nellaiappar Temple Aadi Pooram Thiruvizha) கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளான இன்று (ஜூலை 15) காந்திமதி அம்பாளுக்கு 'வளைகாப்பு உற்சவம்' வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காந்திமதி அம்பாள் மரக் கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு:தொடர்ந்து மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதிக்கு சென்று அங்கு சுவாமி இடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு மேலவாத்தியங்கள் இசைக்க எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நலங்கும், தொடர்ந்து வளையல் அணிவிக்கும் உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்தனர். நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர வளைகாப்பு விழா (Nellaiappar Temple Aadi pooram Baby Shower) மிகவும் பிரசித்தி பெற்றது.
அம்மன் வெண்பட்டு உடுத்தி தலையில் சடை அணிந்து அழகுற காட்சி கொடுப்பார். எனவே, வளைகாப்பு கோளத்தில் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டனர். இந்த நிலையில் அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நேரத்தில் திடீரென யானை பிளிறும் சத்தம் கேட்டது. அதாவது அம்மன் சன்னதி அருகில் நின்று கொண்டிருந்த அக்கோயில் யானை காந்திமதி திடீரென சத்தம் போட்டது. பின்னர், தனது தும்பிக்கையால் தரையில் பலமுறை ஓங்கி தட்டியது. தும்பிக்கை என்றாலே பேரழகு அதுவும் அழகான தும்பிக்கையை கொண்டு யானை தரையில் தட்டியதை எண்ணி வியப்படைந்தனர்.
இதுகுறித்து பாகனிடம் கேட்டபோது, பொதுவாக யானைகள் மகிழ்ச்சியாக ஜாலி மூடில் இருக்கும்போது தான் இதுபோன்ற சத்தம் எழுப்பி தும்பிக்கையால் தரையை தட்டும் என்றார். இவ்வாறு காந்திமதி யானை உற்சாகமாக வளைகாப்பு நிகழ்ச்சின் போது கைத்தட்டியதாக கூறப்படுகிறது. எனவே, அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறுவதை எண்ணி தான் யானை சந்தோஷத்தில் திகைத்துள்ளதால் பக்தர்கள் பேசிக்கொண்டனர். குறிப்பாக அம்மன் வளைகாப்பு முடியும் வரை யானை தும்பிக்கையை அடித்தபடியும் தும்பிக்கையை அங்கும் இங்கும் அசைத்தபடியும் ஆனந்தமாக காட்சி அளித்தது. இதை கேள்விபட்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.