திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனோ தொற்று கடந்த சில நாள்களாக மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்படுவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.
வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து நெல்லை மாவட்டத்திற்கு வருபவர்கள் சுகாதார அலுவலர்களின் சோதனையில் சிக்காமல் இருக்க மாற்றுவழியில் வீடுகளுக்குச் செல்கின்றனர். இது சுகாதார அலுவலர்களுக்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் சவாலாக அமைகிறது.
இந்தச் சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இதுவரை 14 ஆயிரத்து 640 பேர் வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வருகைதந்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலச் சாலைகள், அனைத்துச் சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.
வெளிமாநிலம், வெளிநாடு, வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய தொற்று அதிகம் உள்ள தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம், கப்பல் மூலம் வருபவர்களுக்கும் கரோனோ பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வார காலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
கடந்த 21ஆம் தேதிவரை வெளிநாட்டிலிருந்து விமானம், கப்பல் மூலம் மூன்றாயிரத்து 640 பேர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இதேபோல் வெளிமாநிலங்களிலிருந்து சுமார் 11 ஆயிரத்து 200 பயணிகள் வந்துள்ளனர்.
மொத்தம் இதுவரை 14 ஆயிரத்து 640 பயணிகள் வெளியூர்களிலிருந்து வந்துள்ளனர். மேற்கண்ட அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதிவரை 640 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட நபர்களில் 448 நபர்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 198 நபர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்கள் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
தற்போது சிகிச்சைப் பெற்றுவரும் 198 நபர்களையும் சேர்த்து மொத்தம் 221 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் 25 வார்டுகளும், 6 கிராம பஞ்சாயத்துகளும் கண்காணிப்புப் பகுதிகளாக உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.