திருநெல்வேலி:பாளையங்கோட்டை அருகே மதுபோதையில் நண்பர் ஒருவரை கல்லால் அடித்து படுகொலை செய்த நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சி தெற்கு குளம் அருகில் காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் நெல்லை தாலுதா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர், அங்கு ஆய்வு செய்ததில், இளைஞர் ஒருவர் கம்பு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொலை நடந்த இடத்தில் நான்கு மது பாட்டில்கள் கிடந்ததுள்ளன. மேலும், கல்லைக் கொண்டு அடுப்பு தயார் செய்து சமையல் செய்ததும் தெரியவந்தது. எனவே நண்பர்கள் சேர்ந்து, அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையில் இளைஞரை கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்தனர். தொடர்ந்து, தாலுகா காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர், நெல்லை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து மது பாட்டில்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கல், கட்டையை எடுத்துச் சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் புதிய இருசக்கர வாகனம் ( பஜாஜ் பிளாட்டினா) ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து அந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேவுள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் விநாயகம் என்பவரது மகன் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்ததாகவும், கரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்ததாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.