திருநெல்வேலி:கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வந்த அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதி வழியாக தேனி மாவட்டம் கம்பம் நகரத்துக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து அங்கு அரிக்கொம்பன் பால்ராஜ் என்பவரை தாக்கி அவர் உயிரிழந்தார். அதை எடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். பிடிக்கப்பட்ட அரிக் கொம்பன் யானையை சமீபத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோதையாறு அணைப் பகுதியில் உள்ள குட்டியார் என்ற இடத்தில் ஆறு மணிக்கு விடப்பட்டது.
பலத்த பாதுகாப்போடு வனத்துறை குழுவினர் அந்த யானையை அழைத்து சென்று வனப்பகுதியில் விட்டனர். அதனைத் தொடர்ந்து யானை கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் வனத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டது. மேலும் யானை நடமாட்டத்தை கண்காணிக்க கோதையாறு வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. யானை விடப்பட்டுள்ள குட்டியார் வனப்பகுதி மாவட்ட ரீதியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் வருகிறது.
அதே சமயம் வன ரீதியாக அது நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி செயல்படவில்லை எனவும் எனவே யானை வனத்துறையின் பார்வையில் இருந்து விலகி தூரத்தில் சென்றதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரிக்கொம்பன் யானையின் நிலை குறித்து அப்டேட் கொடுத்து வந்தார்.
குறிப்பாக முதன்முதலில் அவர் தான் யானை குட்டியார் அணை பகுதியில் தண்ணீர் அருந்துவது, புற்களை தண்ணீரில் யானை கழுவி சாப்பிடும் காட்சிகளையும் வீடியோவாக பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் நேற்று அவர் அரிக்கொம்பன் யானை குட்டியார் அருகே வனப்பகுதியில் குழந்தையை போன்று படுத்து உறங்குவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் யானை இயற்கை எழில் கொஞ்சும் புல் தரையில் தூங்குவது போன்ற காட்சிகள் இருந்தது.