2 கிமீ தூரத்தில் உள்ள அருவியை பார்க்க 500 ரூபாய் கட்டணம் வசூலித்த வனத்துறை! திருநெல்வேலி:பாபநாசம் அணைக்கு மேலே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதியில் பாண தீர்த்த அருவி அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாபநாசம் அணையிலிருந்து படகு சவாரி செய்து வந்து பாண தீர்த்த அருவியில் நீராடி வந்தனர்.
இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு நடுவே ரம்மியமாக காட்சி அளிக்கும் பாண தீர்த்த அருவி நெல்லையின் மற்றொரு பொக்கிஷமாக கருதப்பட்டது. ஆனால் சுற்றுப்புற சூழல் காரணம், வனத்துறை கெடுபிடி என பல்வேறு காரணங்களைக் கூறி அருவிக்குச் செல்ல வனத்துறை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், இன்று முதல் பாண தீர்த்த அருவியைப் பார்வையிட வனத்துறை சாலை மார்க்கமாக அதற்கான பிரத்யேக வாகனத்தில் சுற்றுலாப் பயணிகளை ரூபாய் 500 கட்டணம் செலுத்தி அழைத்து செல்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. துவக்க நாளான இன்று சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பார்வையிட குறைந்த எண்ணிக்கையிலே வருகை தந்தனர்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அருவியைப் பார்க்க அனுமதி கிடைத்திருந்தாலும் அருவியில் குளித்து மகிழ அனுமதிக்க வேண்டுமென்பதே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக உள்ளது. ஆனால் அருவியில் குளிக்க வேண்டும் என்றால் அணையில் படகு சவாரி செய்தால் மட்டுமே அருவியை அடைய முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சொரிமுத்து அய்யனார் கோயில் வழியாக காணி குடியிருப்பு மற்றும் அணை ஆகியவற்றை சாலை மார்க்கமாக கடந்து அருவியை சுமார் 2 கிமீ., தூரத்திலிருந்து பார்வையிட மட்டுமே வனத்துறை திட்டமிட்டுள்ளனர்.
எனவே, முதல் நாளான இன்று விடுமுறை நாள் என்ற போதிலும் போதிய கூட்டம் இல்லை. வனத்துறை திட்டமிட்டபடி ஜீப்பில் சொரிமுத்து அய்யனார் கோயில் மைலார் காணி குடியிருப்பு காரையாறு அணை வழியாக கரடு முரடான பாதையைக் கடந்த படி சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். கடைசியில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிய ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
சுமார் 2 கிமீ., இடைவெளியில் அணைக்கு இந்த புறம் வாகனத்தை நிறுத்தி விட்டு அருவியைப் பார்க்க சொன்னார்கள். கண்ணெதிரே வெள்ளியை உருக்கி விட்டாற்போல ரம்மியத்தோடு அருவியில் தண்ணீர் கொட்டினாலும் தூரத்திலிருந்து பார்ப்பதால் ரசிக்க முடியவில்லை.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்கள் செல்போன் மூலம் படம் பிடித்து அருவியை ரசிக்க முயன்ற போதும் அருவியின் முழு அழகை ரசிக்க முடியவில்லை. எனவே ஏமாற்றத்தோடு அதே ஜீப்பில் திரும்பினர். இதை பார்க்கும் போது சினிமா திரைப்படம் ஒன்றில் நடிகர் சிங்கமுத்து நடிகர் வடிவேலுவைக் காட்டு பகுதியில் அழைத்துச் சென்று தூரத்தில் தெரியும் மலையை காட்டி, ’அதோ தெரியுது பார் பாறை, அதை சாண வைத்து தா’ என சொல்லும் காமெடி காட்சி போன்று அமைந்தது.
அருவியை ரசிக்க முடியாவிட்டாலும் அழகிய மலைப்பாதையில் ஜீப் சவாரி என்பது மக்களுக்கு ஒரு வகையான நிம்மதியை கொடுத்தது. மேலும் பாண தீர்த்த அருவிக்கு அருகில் சென்று பார்வையிட வனத்துறை அனுமதிக்க வேண்டும், குளிக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை; நெல்லையில் தொடரும் கொலை குற்றங்கள்.. போலீசாரின் நடவடிக்கை என்ன?