நெல்லை: தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பொது விநியோகத் துறைத் திட்டங்கள், புதிய குடும்ப அட்டை வழங்குவது, பெயர் மாற்றம், நீக்கல் தொடர்பான பணிகள், கரோனா நிவாரணம் வழங்குதல், அரசால் வழங்கப்பட்டுவரும் 14 வகை மளிகைப்பொருள்கள் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
மேலும், தற்போது நடைபெற்றுவரும் கார் சாகுபடி மூலம் கிடைக்கப்பெறும் நெல்லை பெறத் தேவையான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஞான திரவியம் கலந்துகொண்டனர்.
15 நாள்களில் குடும்ப அட்டை
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அர. சக்கரபாணி, "மக்களுக்கு எளிமையான முறையில் பொருள்கள் கிடைக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேல் குடும்ப அட்டைகள் உள்ள கடைகளைப் பிரித்து அந்தக் கடைகளை பகுதி நேரக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தால் 15 நாள்களில் அதனை வழங்கிட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டதன் காரணமாக இந்தத் திட்டம் விரைவுபடுத்தப்படாமல் இருந்தது.
ஜூலை 1ஆம் தேதிமுதல் இந்தத் திட்டம் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு 15 நாள்களில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தால் அதனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
சொந்த கட்டடங்களில் ரேஷன் கடை