திருநெல்வேலி:கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, நேற்று முதல் கோயில்கள் திறக்கப்பட்டன. கோயில்கள் திறக்கப்பட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால், மேள தாளம், இசை வாத்தியம், வில்லிசை, கணியான் கூத்து இசைக்கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேளதாளம் முழங்க ஆட்சியர் அலுவலகம் சென்ற இசைக்கலைஞர்கள், தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.
அந்த மனுவில், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதரத்தை மேம்படுத்த அரசு உதவும் வகையில், கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும், தங்களின் குழந்தைகளின் கல்வி செலவிற்கு அரசு உதவித்தொகை வழங்குவதோடு, ஊரடங்கு காலம் முடியும்வரை குடும்ப பராமரிப்பு நிதியாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேளதாளங்கள் முழங்க ஆட்சியர் அலுவலகம் வந்த இசைக்கலைஞர்கள் மேலும், அரசின் அனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் தங்களது கலைகளை பயன்படுத்தவேண்டும் எனவும், தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அமைப்பில் பதிவு பெற்றுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான ஓய்வுதியம் பெறும் வயதை ஆண் கலைஞர்களுக்கு 50 என்றும், பெண் கலைஞர்களுக்கு 45 என்றும் நிர்ணயம் செய்து ஓய்வு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிவாரணம் கோரி இசைக்கலைஞர்கள் நடனம்!