திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து பல்வேறு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதை அடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூபாய் 6 ஆயிரம் பணமும், 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்குவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று (டிச.25) நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி தாலுகாக்களில் முழுமையாகவும், அம்பாசமுத்திரத்தில் 12 வருவாய் வட்டங்களிலும், நாங்குநேரியில் 30 வருவாய் வட்டங்களிலும், ராதாபுரத்தில் 10 வருவாய் வட்டங்களிலும் நடைபெற்றது.