தூத்துக்குடி: தமிழர்களின் பாரம்பரியம், வரலாற்றை பறைசாற்றும் வகையில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பாக சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தொல்லியல் எச்சங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்க பட்டை, முதுமக்கள் தாழி, மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் உள்பட 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020 - 2021 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, இன்று ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று அருங்காட்சியகம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட சிறப்பு விருந்தினர்கள் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் அகழ்வாராட்சியின் தன்மை குறித்தும் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சிறப்பம்சங்கள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர். அதேபோல் இந்தியாவின் முதல் முறையாக கண்ணாடி காசு மூடப்பட்ட வகையில் தொல்லியல் பொருட்களை பார்வையாளர்கள் பார்க்கும் வகையிலான வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: முதுமலை வரும் குடியரசுத் தலைவர் முர்மு: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!