திருநெல்வேலி:நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). இவருடைய மகன் தமிழரசன். தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 28). தங்கராஜ் மனைவி இறந்து விட்டதால் திடீரென இரண்டாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்து விட்டதால் தங்கராஜ் தனது வீட்டை மகன் தமிழரசன் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
அதே சமயம் திடீரென மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே தங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியோடு அந்த வீட்டில் யாருடைய இடையூறும் இல்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எண்ணியுள்ளார். இதனால் தனது மகனிடம் வீட்டைத் தனது பெயரில் எழுதித் தருமாறு அவ்வப்போது தொலைப்பேசியில் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது மகனிடம் வீட்டைக் கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் இதற்குத் தமிழரசன் மறுத்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜை இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று கண்டித்து உள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தமிழரசன் அருகில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து தனது மருமகள் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்துள்ளனர். அவர்களைக் கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.