திருநெல்வேலி: வீடு என்பது கோவில் மாதிரி என்று கூறுவது உண்டு. அப்படி ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது மிகப் பெரிய கனவு என்றே கூறலாம். ஆண்கள் தனது வெற்றி தோல்விகளை மனைவியோடு பகிர்ந்து கொள்ளவும், குழந்தைகளோடு கொஞ்சி விளையாடவும், பெற்றோர்களிடம் பரிவு காட்டவும், 'வீடு' வாழ்க்கையின் முக்கிய தேவையாக இருந்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து வீடு கட்டுவார்கள்.
இந்த நிலையில் பார்த்து பார்த்து கட்டிய தங்கள் வீட்டை தெரு நாய்களுக்காக தியாகம் செய்த தந்தை, மகனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கோமதி டிப்ளமோ முடித்து விட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரலையின் போது போடப்பட்ட ஊரடங்கால் தெரு நாய்கள் உணவின்றி தவித்தன ஏற்கனவே நாய்கள் மீது அதிக பிரியம் கொண்ட கோமதி, கொரோனா ஊரடங்கின் போது தெரு நாய்களுக்கு ஓடிச் சென்று உதவியுள்ளார். தினந்தோறும் நாய்களுக்கு உணவளித்தும் வந்துள்ளார். அப்போது தெரு நாய்கள் மீது கோமதிக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தெரு நாய்கள் அடிப்பட்டு ஆதரவில்லாமல் தவிப்பதைக் கண்டு மனமுடைந்துள்ளார்.
எனவே சாலைகளில் அடிபட்டு ஆதரவில்லாமல் தவிக்கும் நாய்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்க கோமதி முடிவெடுத்துள்ளார். தனது முடிவை வீட்டில் சொல்ல அவரது தந்தை முருகனும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதையடுத்து தந்தை, மகன் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் வீட்டிலேயே தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். வீதியில் அடிபட்டு மற்றும் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் தெருநாய்களை கோமதி மீட்டு ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் அந்த நாய்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்கிறார்.
பின்னர் நாய் பூரண குணமடைந்த பிறகு அந்த நாயை அதே இடத்தில் கொண்டு விடுவார். நாளடைவில் கோமதியின் செயலை அறிந்த பலர் தெருவில் அடிபட்டு கிடக்கும் நாய்கள் குறித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். யார் தகவல் கொடுத்தாலும் மாட்டேன் என்று சொல்லாமல் உடனடியாக கோமதி தெரு நாய்களை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்து வரத் தொடங்கினார். அதன் காரணமாக இப்போது கோமதியின் வீடு முழுவதும் நாய்கள் நிறைந்து காணப்படுகிறது.
தற்போது அவர் 30 முதல் 40 நாய்களை தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார். குறிப்பாக இரண்டு மாடிகள் கொண்ட கோமதியின் வீட்டில் எங்கு பார்த்தாலும் நாய்களாக காட்சியளிக்கிறது. நாய்களுக்கு உணவு வைப்பது, அவை இயற்கை உபாதைகள் கழிப்பது, குளிப்பது என அனைத்தும் வீட்டுக்குள் வைத்து நடைபெறுகிறது.
நாய்கள் மட்டுமில்லாமல் ரோட்டில் அடிபட்டு கிடக்கும் காக்கா, பூனை போன்ற உயிரினங்களுக்கும் கோமதி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். வீட்டில் முருகன், கோமதி படுக்க வேண்டிய கட்டில் மெத்தையில் நாய்களும் பூனைகளும் உரிமையோடு படுத்துள்ளன.
ஓய்வு காலத்தில் நேரத்தை போக்கிக் கொண்டிருந்த கோமதியின் தந்தை முருகனும் தனது மகனின் செயலை விரும்பி அவரும் உடனிருந்து நாய்களை பராமரிக்க தொடங்கியுள்ளார். பொதுவாக நாய் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நபர்கள் ஆசைக்காக ஒன்று அல்லது இரண்டு நாய்களை வளர்த்து பராமரிப்பார்கள்.
ஆனால் கோமதியும் அவரது தந்தையும் வீதியில் ஆதரவு இல்லாமல் தவிக்கும் தெருநாய்களை காப்பாற்ற தங்கள் வீட்டையே நாய்களின் இல்லமாக மாற்றிய சம்பவம் அருகில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அக்கம் பக்கத்தில் சிலர் கோமதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அந்த எதிர்ப்பையும் தாண்டி கோமதி தொடர்ந்து தெருவில் அடிபட்டு கிடக்கும் நாய்களை தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.