திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கனஅடி வெள்ள நீரில் கண்ணடியன் அணைக்கட்டில் இருந்து 2ஆயிரத்து 765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு மற்றும் தாமிரபரணி நதிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.
நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் வருகிற 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் வெள்ளநீர் கால்வாய் பணிக்காக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு மழை பெய்து வெள்ளநீர் ஏற்பட்டால் 1300 கனஅடி தண்ணீர் தற்காலிகமாக சோதனை ஓட்டமாக இந்த வெள்ள நீர் கால்வாயில் செல்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் சோதனை ஓட்டமாக வெள்ள நீர் கால்வாய் பணிகளுக்காக திறந்து விடப்பட இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தான் இந்த பணிகளை முன்னெடுப்பதாகவும் கூறி கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.