திருநெல்வேலி: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆண்டுதோறும் விவசாயிகள் கார் சாகுபடி பணிகள் மேற்கொள்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளை நம்பியே மேற்கண்ட பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது.
மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மேற்கண்ட அணைகள் திகழ்கின்றன. ஆனால் பருவமழை பொய்ப்பதால் ஜூன் மாதம் 1ம் தேதி, பெரும்பாலும் அணைகளில் தண்ணீர் திறப்பதில்லை. அந்த வகையில் இந்த ஆண்டும் கார் சாகுபடி மேற்கொள்வதற்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
குறிப்பாக வடகிழக்கு பருவமழை பொய்த்து போன காரணத்தினாலும், தென்மேற்கு பருவமழை கிடைக்க வேண்டிய நேரத்தில் உரிய மழை பொழிவு கிடைக்காத காரணத்தினாலும், அணைகளில் நீர் இருப்பு வெகு குறைவாகவே இருந்தது. எனினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 18ஆம் தேதி கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
70 அடிக்கும் மேலாக நீர்மட்டம் இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அதனை நம்பியும், மழைப்பொழிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கான நீர் வரத்தும் வெகுவாக குறைந்து. அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக குறைய தொடங்கியது.
தற்போதைய நிலையில் 124 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் குறைந்தபட்சம் 64 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 414 கன அடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருப்பதன் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையிலும், குறைந்த அளவான நீர் இருப்பாக 44 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இதனால் எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கார் சாகுபடி விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், அதனை வேளாண் துறை அதிகாரிகள் மூலமாக விவசாயிகளுக்கு தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கும்படியும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது.