தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தில் மிதக்கும் விவசாய பயிர்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை - தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி: கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் ஏக்கர் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

damaged crop
damaged crop

By

Published : Jan 15, 2021, 6:07 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகளை நம்பி 84 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல், வாழை, உளுந்து, சோளம் ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ள சூழ்நிலையில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழையால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் நெல் பயிரிடப்பட்டு தை மாதம் தொடக்கத்தில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மார்கழி மாதம் முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடந்த 15 நாட்களில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 330 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 690 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையில், தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் சேரன்மகாதேவி அருகே சங்கம் திரடு என்ற கிராமத்தில் நெல், வாழை பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேலும் வைக்கோல்களை தண்ணீர் அடித்து சென்றதால் மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் பல கி.மீ., தூரம் சென்று புல்களை வெட்டி எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த நான்கு நாட்களாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர்கள் குழு உறுதியளித்த நிலையில், அதன்படி உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details