திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கெளவுதமபேரியைச் சேர்ந்த விவசாயி மதியழகன் (48). இவர் நேற்று (ஜூலை 27) தனது சகோதரர் ரவி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலை அருகே சென்றுகொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் ரவி, மதியழகனைச் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மதியழகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். ரவி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த மதியழகனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறை, உடற்கூறாய்வுக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், ஊர் பஞ்சாயத்தால் மதியழகன் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவரது சகோதரர் ரவி கூறுகையில், "ஐந்து வருடத்திற்கு முன்பு எனது மகள் காதல் திருமணம் செய்துகொண்டார். அதற்காக ஊர் பஞ்சாயத்தில் 1,500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தெரிவித்தனர். ஆனால், நான் அபராதம் செலுத்த மறுத்துவிட்டேன். பின்னர் எனது குடும்பத்தினரின் அறிவுறுத்தல்படி பஞ்சாயத்தில் அபராதத்தைக் கட்டிவிட்டேன்.