திருநெல்வேலி:அழகிய பாண்டிபுரம் சுப்பையா புரத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (40), இவர் தான் வைத்திருக்கும் லோடு ஆட்டோவில் தனக்கு சொந்தமான காய்கனி மற்றும் பிறர் விவசாயிகளின் காய்கனி ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி டவுனில் செயல்பட்டுவரும் நைனார் குளம் காய்கறி சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நபர் சசிகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சசிகுமாருக்கு சொந்த ஊரான சுப்பையா புறத்தில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றை நிர்வகிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. எதிர் தரப்புக்கும் சசி குமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு வெடித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28 தேதி இது தொடர்பாக மானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாகவே சசிகுமார் வெட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்தில் ஒன்பது கொலைகள் நடந்துள்ள நிலையில் நேற்று நெல்லை வந்த டிஜிபி சைலேந்திரபாபு தென் மாவட்டங்களில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கூறினார். ஆனால் அவர் வந்து சென்ற தினமே மேலும் ஒரு கொலை சம்பவம் நெல்லையில் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தனியார் பார் ஊழியர் கொலை: உரிமையாளர் உள்பட 6 பேர் கைது