கழுத்தளவு வெள்ளத்துக்கு மத்தியில் மரத்தின் மீது அமர்ந்து உயிர் தப்பியது குறித்து விவசாயி பகிர்ந்த வீடியோ திருநெல்வேலி: வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை வரை பெய்தது. தொடர்ந்து 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தும், பல இடங்களில் உள்ள குளம் போன்றவை உடைந்ததாலும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
மேலும் தொடர் மழையாலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மொத்தமும் நீர் சூழ்ந்து வெள்ளத்தில் தத்தளித்தது. அதனைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளத்தின் நடுவே சுமார் 39 மணி நேரம் உணவு, தூக்கமின்றி சிக்கித் தவித்த 72 வயது முதியவர் ஒருவர், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்களால் மீட்கப்பட்டார். அந்த வெள்ளத்தில் சிக்கிய முதியவருக்கு ஏற்பட்ட சவால்கள் மற்றும் இன்னல்கள் குறித்து அவர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
அதாவது, நெல்லை - அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையில் மேலச்சேவல் அருகே அமைந்துள்ள கொழுமடை கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த கால்நடை விவசாயி செல்லையா, ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் குடில்கள் அமைத்து, ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
தினமும் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு செல்லையா தோட்டத்திலேயே தங்குவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி இரவு செல்லையா தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு, ஓலை குடிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் முந்தைய நாள் இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டிருந்தது.
இருப்பினும் தனது ஆடுகளை பட்டினி போடக்கூடாது என்பதற்காக, செல்லையா வழக்கம்போல் தோட்டத்திலேயே தங்கியிருந்துள்ளார். அப்போது சுமார் இரவு 10 மணியளவில் திடீரென செல்லையாவின் தோட்டத்தை நோக்கி வெள்ளநீர் வரத் தொடங்கியுள்ளது. மழை பெய்வதால் தண்ணீர் அதிகமாக வருகிறது என்று நினைத்துக் கொண்டு, முதலில் செல்லையா வெள்ளத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைஎன அவர் கூறினார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென சுமார் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்ததால் செல்லையா அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது தனது ஆடுகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவரது நினைவில் இருந்ததாகவும், எனவே அவசரம் அவசரமாகத்தான் வளர்த்த ஆடுகளை பாதுகாக்க முயன்றதாகவும், ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சென்றதால் மேற்கொண்டு தண்ணீரில் நடப்பதற்கு செல்லையாவின் உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் வெள்ளம் சூழ்ந்ததால் உயிர் பயம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் செல்லையா தன்னை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்த மாமரத்தில் ஏறி அமர்ந்து கொண்டுள்ளார். அப்போது செல்லையாவின் கண்முன்னே அவர் ஆசையாக வளர்த்த சுமார் 27 ஆடுகளை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. இருப்பினும், அவரால் எதுவும் செய்ய முடியாமல் கண்ணீருடன் மரத்தின் மேல் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததாக வேதனை தெரிவித்தார்.
இது ஒரு புறம் இருக்க, இருள் சூழ்ந்த அந்த தோட்டத்திற்குள் கழுத்து அளவு வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட செல்லையா, கீழே இறங்க முடியாமல் விடிய விடிய மரத்தின் மேலே அமர்ந்து உறக்கம் இல்லாமல் தவித்துள்ளார். மறுநாள் விடிந்தவுடனும், வெள்ளம் குறையாததால் தொடர்ந்து செல்லையா சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் மரத்தின் கிளையில் அமர்ந்தபடியே, யாராவது தன்னைக் காப்பாற்ற வருவார்களா என்று பரிதவித்துள்ளார்.
ஆனால், செல்லையாவின் தோட்டத்தைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகள் எதுவும் இல்லை என்பதாலும், 6 அடி அளவிற்கு தண்ணீர் சென்றதால் யாராலும் உள்ளே செல்லவும் முடியவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே, தோட்டத்தில் வெள்ளம் சென்றதை அறிந்த செல்லையாவின் மகன், தனது தந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் பரிதவித்துள்ளார்.
அப்போது தோட்டத்து அருகில் உள்ள சிலர், செல்லையா வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார் என்பதை அவரது மகனிடம் தெரிவித்துள்ளனர். எனவே, தனது தந்தையை காப்பாற்ற செல்லையாவின் மகன் பலரையும் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த மீட்புக் குழுவினருக்கு செல்லையாவின் நிலை தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் தண்ணீரில் நீந்தும் ஜாக்கெட் மற்றும் கயிறு போன்ற உபகரணங்களுடன் செல்லையாவை மீட்க களமிறங்கி உள்ளனர்.
அதன்படி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாய்ந்து ஓடிய வெள்ளத்தில் கயிறு கட்டி செல்லையாவை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அரசு சார்பில் அங்கு யாரும் மீட்க வராத நிலையில், எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த நபர்கள் நாள் முழுவதும் மரத்தில் ஏறி பரிதவித்த முதியவரை காப்பாற்றிய சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
கழுத்தளவு வெள்ளத்துக்கு மத்தியில் நாள் முழுவதும் மரத்தில் ஏறி அமர்ந்து உயிர் தப்பியது எப்படி என்பது குறித்து செல்லையா ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரேத்தியமாக அளித்த பேட்டியில், "அன்று 9, 10 மணி இருக்கும், நான் ஆடுகளை அடைத்து விட்டு படுத்துக் கொண்டிருந்தேன். திடீரென தண்ணீர் வந்தது. மழை பெய்து கொண்டிருப்பதால் வரும் தண்ணீர் என நினைத்தேன். பிறகு அதிக அளவு வெள்ளம் வந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடலில் போதிய பலம் இல்லாததால், ஆடுகளை காப்பாற்ற முடியவில்லை.
கழுத்தளவு தண்ணீரில் மெதுவாக நடந்து நடந்து, ஒரு மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டேன். என் கண் முன்பே நான் வளர்த்த ஆடுகளை வெள்ளம் அடித்துச் சென்றபோது, 3 லட்சம் மதிப்பிலான ஆடுகள் எல்லாம் போய்விட்டதே என்ற நினைப்புதான் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நான் மாட்டிக் கொண்டேன் என்பதை வீட்டில் தெரிவிக்ககூட என்னால் முடியவில்லை.
செல்போனும் கையில் இல்லை, மறுநாள் எனது மகன்தான் அவர்களை அழைத்து, என்னைக் காப்பாற்றினார்கள். நான் உயிர் பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 27 ஆடுகளில் 9 ஆடுகள் மட்டுமே உயிர் மிஞ்சியது. மீதி 18 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டு உயிரிழந்துவிட்டது. எனவே, அரசாங்கம் எனது ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என தனது அனுபவத்தை வேதனையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கனமழை பாதிப்பு.. களத்தில் இறங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்!