நெல்லை:களக்காடு அருகே இன்று(மார்ச்.16) பிரபல ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யார் இந்த நீராவி முருகன்..? அவரது குற்றப்பின்னணி என்ன..? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
10 ஆண்டுகளாக தொல்லை தந்த ரவுடி
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அடுத்த நீராவிமேட்டைச் சேர்ந்தவர், முருகன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறைக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர், நாளடைவில் கொலை, கொள்ளை, வழிப்பறி எனப் பல்வேறு பெரிய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
முருகன் என்ற இவரது பெயர் நாளடைவில் நீராவி முருகன் என்று மாறியது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று முருகன் திருட்டுத்தொழிலில் கைவரிசை காட்டத் தொடங்கினார். குறிப்பாக நீராவி முருகன், சென்னையில் தங்கியிருந்து பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீராவி முருகன் மீது மொத்தம் 3 கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தில் நீராவி முருகன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் ஒருவர் வீட்டில் புகுந்து சுமார் 40 சவரன் நகைகளை நீராவி முருகன் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து நீராவி முருகனை பல நாட்களாக தீவிரமாகத் தேடிவந்தனர்.