தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் தலை தூக்கும் சாதி மோதல்: சென்னையில் பிரபல ரவுடி கைது

திருநெல்வேலியில் மீண்டும் சாதி மோதல்கள், தலை தூக்கத் தொடங்கியதால், காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து ரவுடிகளைப் பிடித்து வருகின்றனர்.

: சென்னையில் பிரபல ரவுடி கைது
: சென்னையில் பிரபல ரவுடி கைது

By

Published : Jul 18, 2021, 3:16 PM IST

திருநெல்வேலி: சாதி மோதல் அதிகம் நிறைந்த பகுதியாக அறியப்படுகிறது, திருநெல்வேலி மாவட்டம். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு தொடர்ச்சியாக சாதி மோதலால், பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் சில சமுதாயங்களைச் சேர்ந்த நபர்களுக்குள் போட்டி இருந்து வருகிறது. இச்சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மோதல்கள் குறைந்திருக்கின்றன.

தலை தூக்கிய சாதி மோதல்

இந்நிலையில் தற்போது மீண்டும் சாதி மோதல் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம், வாகைக் குளத்தைச் சேர்ந்த முத்து மனோ (22) என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க சென்றபோது அங்கிருந்த சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அப்பகுதியில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான், முத்து மனோவை திட்டமிட்டு சிறைக்குள் வைத்து கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

எனவே, முத்து மனோ உடலை வாங்க மறுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பிறகு நீதிமன்றம் தலையீட்டின்பேரில் சமீபத்தில் முத்துமனோவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இருப்பினும், முத்துமனோ கொலைக்கு பழிக்குப்பழியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரையாவது கொலை செய்வோம் என்று சூளுரை ஏற்ற, முத்து மனோ தரப்பினர் ரகசியமாகத் திட்டம் தீட்டி வந்தனர்.

அதன்படி முத்து மனோ கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஜேக்கப் என்ற கைதியின் நெருங்கிய உறவினரான தாழையூத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரை சில தினங்களுக்கு முன்பு முத்துமனோ தரப்பினர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

முன்னதாக சிறையில் கைதி கொலை செய்யப்பட்டதால், சாதி மோதல் தலை தூக்கியதை உணர்ந்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தனிப்படை அமைத்து ரவுடிகள் பிடிப்பு

சிறைக் கொலையின் தொடர்ச்சியாக வெளியில் மற்றொரு கொலை சம்பவம் அரங்கேறியதால் காவலர்கள் உஷார் ஆகினர்.

குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிசத்தை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ரகசியமாக 10 தனிப்படை அமைத்தார்.

மேலும் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் எந்தெந்த காவல் நிலையங்களில் முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதை தனிப்படை காவலர்கள் ஆய்வு செய்தனர். இந்தச் சூழ்நிலையில் தனிப்படை காவலர்கள் நடத்திய அதிரடி வேட்டையில் நேற்று (ஜூலை 17) ஒரே நாளில் நெல்லையைச் சேர்ந்த 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல ரவுடி கைது

இதில் குறிப்பாக நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி கோழி அருள் என்பவர் சென்னையில் வைத்து தனிப்படை காவலர்களால் சுற்றி வளைக்கப்பட்டார். கோழி அருள் என்பவர் நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார் ஆகியோரின் கூட்டாளி ஆவார்.

கோழி அருள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும், பட்டியலின சமூகத்திற்கும் இடையே மோதல் நீடித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக கோழி அருளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதை அறிந்து கோழி அருள் சென்னையில் பதுங்கி உள்ளார். இருப்பினும் தனிப்படை காவலர்கள் அவரை நேற்று (ஜூலை 17) சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுதவிர திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பதுங்கியிருந்த 10 ரவுடிகள் நேற்று (ஜூலை 17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கேட்டபோது, 'ரவுடியிசத்தை ஒழிக்க பழைய வழக்கு ஆவணங்களைத் தூசிதட்டி சரி பார்த்து வருகிறோம்.

ரவுடிகள் அனைவரும் எந்தவித பாரபட்சமும் இன்றி கைது செய்யப்படுவார்கள். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தில் கிடந்த ரூ.10,000 - காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர்

ABOUT THE AUTHOR

...view details