திருநெல்வேலி மாவட்டம் டவுன் பாப்பா தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு அருண், அஜித் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தனது இளைய மகன் அஜித்தை தங்கள் பகுதியை சேர்ந்த சிலர் அடித்து கொன்றுவிட்டதாகவும் எனவே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இன்று குடும்பத்தினருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருமாள் மனு அளிக்க வந்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடியாது என்று காவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், அவரது மூத்த மகன் அருண், குடும்பத்தினர், குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கும்படி பெருமாள், அவரது குடும்பத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் காவலர்கள் அனுமதியோடு பெருமாள் மற்றும் உயிரிழந்த அஜித்தின் மனைவி ரெஜிதா ஆகியோர் மட்டும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து மனு அளித்தனர்.