திருநெல்வேலி:இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின் தலைமையிடமாக கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகம் அறிவியல் மையத்தின் தலைமை அலுவலகத்திற்கும், பெங்களூருவில் உள்ள அறிவியல் மைய அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதில், இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தற்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன், 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.