நெல்லைஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்ய மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆகியோர் வருகை தர உள்ளனர். அதனைத் தொடர்ந்து சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை தந்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இன்று பாரத தேசம் முழுவதும் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாரதப்பிரதமர் மோடி நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசபக்தி உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவார்கள்.
சுதந்திரப்போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் அதன் ஒரு பகுதியாக ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்ட ஒண்டி வீரனின் நினைவாக அவரது தபால் தலை வரும் 20ஆம் தேதி நெல்லையில் வெளியிடப்படுகிறது. நூறாவது சுதந்திர தினத்தைக்கொண்டாடும் நேரத்தில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இருக்கும்.