திருநெல்வேலி: உயர்கல்வி படிக்கும் அனைவருக்குமே கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும். அதிலும் சிறிய நகரங்கள் மற்றும் குக்கிராமங்களில் இருந்து உயர்கல்வி படிக்கும் இளைஞர்கள் சென்னை போன்ற மிகப்பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பெற அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக கிராமங்களில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் செல்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. ஆனால் கரோனா போன்ற பேரிடர் காரணமாகவும் இயந்திர வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு காரணமாகவும் இளைஞர்கள் சொந்த கிராமத்தில் குறைந்த வருமானத்தில் நிறைவான நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்பத் தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்றே கூறலாம். இதுபோன்ற சூழலில் நெல்லையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு, அந்த வேலையை உதறித் தள்ளி தற்போது தனது சொந்த கிராமத்தில் மாடு மேய்த்து வரும் சம்பவம் அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சேதுராமலிங்கம் - பார்வதி தம்பதியின் மகன் ஓம் பிரகாஷ். இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் திருமணமாகி பிரபஞ்சன் என்ற மகன் உள்ளார். ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சவூதி, குவைத் போன்ற வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார். கைநிறைய சம்பளம் வாங்கினாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று எண்ணியுள்ளார். எனவே தனது வெளிநாட்டு வேலையை உதறித் தள்ளிவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ் சொந்த ஊரான சிவந்திபுரத்தில் குடியேறிவிட்டார்.
சொந்த ஊரில் விவசாயம் பார்க்க வேண்டும் என்பது ஓம் பிரகாஷ் லட்சியமாக இருந்துள்ளது. எனவே தனது எண்ணப்படி பாபநாசம் அடுத்த வடமலை சமுத்திரம் என்ற கிராமத்தின் அருகே தான் சம்பாதித்த பணத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, அதில் இயற்கையான முறையில் தனது தேவைக்கு விவசாயம் செய்து வருகிறார். அதைவிட குறிப்பாக ஓம் பிரகாஷ் தனது தோட்டத்தில் நாட்டு மாடுகளை வளர்த்து அந்த மாடுகளை அவரே முழுநேரமும் பராமரித்து வருகிறார்.
இதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான தனது தோட்டத்தில் ஓம் பிரகாஷ் மண் மணம் மாறாத மண் வீட்டை ஒன்றையும் அமைத்துள்ளார். அங்கேயே குடியிருந்து, தான் ஆசையாக வளர்த்துவரும் கால்நடைகளைப் பராமரித்து வருகிறார். 30 வயதே ஆன இளைஞரான ஓம் பிரகாஷ் தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தோம் என்ற ஆடம்பரம் துளியும் இன்றி மிகவும் எளிமையாக கையில் கம்புடன் தினமும் காலை தனது மாடுகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாடுகளுடன் இருந்து மேய்ச்சலை முடித்துக் கொண்டு மீண்டும் தோட்டத்துக்கு திரும்புகிறார். பின்னர் மாடுகளுக்கு தேவையான உணவுகளை கொடுத்து நாள் முழுவதும் அங்கேயே நேரத்தை செலவிடுகிறார். அழிந்து வரும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் தென்பாண்டி மற்றும் செங்கல்பட்டு குட்டை ஆகிய இரண்டு ரக நாட்டு மாடுகளை மட்டுமே வளர்க்கிறார்.