திருநெல்வேலி: நாளுக்கு நாள் மின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்சார வாரியம் சார்பில் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிகளில் எனர்ஜி கிளப் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் நடந்த இந்த நிகழ்வை, நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன்ராஜ், “மின்சார சிக்கனம் குறித்து மாணவர்களுக்கும், அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் எனர்ஜி கிளப் தொடங்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள எனர்ஜி கிளப்! இதற்காக முதற்கட்டமாக 60 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளியின் சார்பில் கிளப்பிற்கு ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு மின்சார வாரியம் சார்பில் மின் சிக்கனம் குறித்து இன்று பயிற்சி வகுப்பு நடக்கிறது. இவர்கள் கிளப்பிற்கு மாணவ மாணவிகளைச் சேர்த்து, அவர்களுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிகளவில் ராக்கெட் உற்பத்தி செய்ய திட்டம்: காமகோடி வீழிநாதன்