தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த ரவணசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தாவூத் மீரான் (50). இவர் லட்சுமி என்ற 54 வயது பெண் யானையை கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். கோயில் திருவிழா, முக்கிய நிகழ்வுகளுக்கு யானையை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த வகையில், அவர் யானை லட்சுமியை அழைத்துக்கொண்டு நேற்று (அக்.,17) திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் உள்ள முத்துமாலை அம்மன் கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயில் அருகில் உள்ள ஆற்றில் யானை குளிக்க வைத்து இரவு உணவு கொடுத்து விட்டு யானையுடன் அங்கேயே தங்கியுள்ளார்.
வழக்கம்போல இன்று காலை எழுந்து யானையைச் சென்று பார்த்த போது யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதைக் கண்டு தாவூத் மீரான் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் முக்கூடல் காவல் துறையினர் திருநெல்வேலி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.