arikomban: நெல்லை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும் அரிக் கொம்பன்; பொதுமக்கள் எதிர்ப்பு!! தேனி: கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த மாதம் 27ஆம் தேதி திடீரென நுழைந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தியதுடன் வாகனங்களை சேதப்படுத்தியது. அப்போது, யானை தாக்கியதில் கம்பம் நகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அரிக்கொம்பனை பிடிப்பதற்கு 3 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டது. வனத்துறையினர் அரிக்கொம்பனை தீவிரமாகத் தேடிவந்த நிலையில் சின்ன ஓவுலாபுரம் என்ற பகுதியில் கும்கி யானை உதவியுடன் அரிக்கொம்பன் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு நெல்லை மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணை அருகே முத்துக்குழி என்ற இடத்தில் விடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Arikomban: முடிவுக்கு வந்த அரிக்கொம்பனின் ஆட்டம்.. 10 நாட்கள் வேட்டையின் முழு விபரம்!
வனத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் மிகுந்த பாதுகாப்போடு அரி கொம்பன் யானையை அழைத்து வந்தனர். மணிமுத்தாறு சோதனைச் சாவடி வழியாக யானை லாரியில் கொண்டு செல்லப்பட்டது. முத்துக்குழி என்ற இடத்தில் அரிக்கொம்பன் யானை பாதுகாப்போடு விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், அரிக்கொம்பன் யானையை நெல்லை வனப்பகுதியில் விட மணிமுத்தாறு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் மணிமுத்தாறு அணை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அங்கு வந்த காவல் உதவி கண்காணிப்பாளர் சதீஷ்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், யானையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான அரிக்கொம்பன்...குளிர்வித்த தீயணைப்பு துறையினர்...