தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2,069 பதவி இடங்களுக்காக நேரடி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பாதுகாப்பு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் உயர் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஜெயகாந்தன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் பரப்புரைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்டத்தில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.