திருநெல்வேலி:நெல்லை கேடிசி நகரில் நடைபெற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் இல்ல விழாவில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள்.
21 மாத கால ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில் கருணாநிதிக்கு நினைவிடமும், நூலகமும் மட்டுமே கட்டி இருக்கிறார்கள். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். கடலுக்குள் வைப்பதால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையாக கொடுத்த புத்தகத்தை, தலையணை போன்று வைக்கும் அளவிற்கு அறிவிப்புகளை கொடுத்தார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனை அதிகரித்து, தாராளமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள், அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். ஈரோடு நகராட்சி பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தி முடித்த பிறகும் கூட, முழுமையான குடிநீர் கொடுக்காத அரசு, திமுக அரசு. மக்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.