தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தன்னை அமைச்சராக்கிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் எடப்பாடி' கனிமொழி - பழனிசாமி

திருநெல்வேலி: தன்னை அமைச்சராக்கிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்றும், ரூ.25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தெரிவித்தார்.

கனிமொழி
கனிமொழி

By

Published : Dec 23, 2020, 10:54 AM IST

Updated : Dec 23, 2020, 1:19 PM IST

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நேற்று (டிச.22) திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கினார். காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இறுதியாக, மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழிக்கு, மாவட்ட திமுக சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

பின்னர் அவர் பேசியதாவது,"மக்கள் இந்த ஆட்சியின் முடிவை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி ஒரு அராஜக ஆட்சி. மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் ஆட்சி.

தமிழ்நாடு, மக்களை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ள இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர். பாஜக அரசு, பொது மக்களை பிரித்து ஆளுகிறது மத்தியில் இருக்கும் பாஜக அரசுக்கு அதிமுக அரசு சிவப்பு கம்பளம் விரித்து, தன் பதவியை பாதுகாத்து கொள்கின்றனர். விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து அமைச்சராகினார். பின்னர் சசிகலா காலில் விழுந்து முதல்வரானார். தற்போது பிரதமர் மோடி, அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறார். தன்னை விவசாயி, விவசாயி என்று அழைத்து கொள்ளும் ஒரு முதலமைச்சர், இன்று விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

இது முதல் துரோகம் இல்ல. ஏற்கனவே குடியுரிமை சட்டம் கொண்டு வந்தார்கள், இந்த சட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை கூட காப்பாற்ற முடியாத வக்கற்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னால் முத்தலாக்கிற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வந்தார்கள், யாருமே முத்தாலக் சரி என்று சொல்லவில்லை. எந்தப் பெண்ணும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இது ஒரு குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை இதைத் தீர்ப்பதற்கு நீதிமன்றம் போகலாம். ஆனால் கிரிமினல் குற்றவாளியாக மாற்றக்கூடிய சட்டம் எப்படி வரமுடியும். வேறு மதங்களில் குடும்பத்தை விட்டு விட்டு, தனது மனைவியை விட்டு விட்டு பல கணவர்கள் வெளியில் சென்று விடுகிறார்கள். ஆனால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயாது. மத்திய அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்களை இயற்றி வருகிறது.

அதிமுக அரசு அதையெல்லாம் மௌனமாக ஏற்றுக் கொண்டு ஆதரிக்கின்றனர். ஏதோ காலத்திற்கும் இவர்கள் தான் அங்கே இருக்கப்போவதாக மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் யார் மீது வேண்டுமானாலும் கை வைக்கலாம். ஆனால் இன்று நீங்கள் விவசாயிகள் மீது கை வைத்து உள்ளீர்கள். அவர்கள் மீது கை வைத்தால் யாரும் சோற்றில் கை வைக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக அடுத்த தேர்தலில் ஒரு மாற்றம் வரும். அதற்கு முன்னால் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

தமிழர்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் தனது தன்மானத்தை, மொழி உணர்வை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்று நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஏன்னென்றால் இந்த நாடு செல்லும் திசை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத திசையாகவுள்ளது. இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் துப்பாக்கிச்சூடு காவல்நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் அடித்துக் கொல்வார்கள்.

முதலமைச்சரிடம் கேட்டால் மூச்சுத்திணறல் என்று சொல்வார். நீங்கள் ஸ்டாலினை பார்த்து அறிக்கை நாயகன் என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் அடிக்கல் நாயகன். ஏனென்றால் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு நிறுத்தி கிடப்பில் போட்டிருப்பார்.

முதலமைச்சர் தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்காக பொங்கலுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட, மக்கள் உங்களுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. தன்னை அமைச்சராக்கிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி. இன்று வரை ஜெயலலிதா மரணத்தில் உண்மையாக என்ன நடந்தது என்று பலர் கேள்வி எழுப்பியும் பதிலளிக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை இவர்கள் கையில் இருந்து மீட்டெடுப்போம்" என்றார் கனிமொழி.

Last Updated : Dec 23, 2020, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details