திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கு உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பகவதி. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடர்ந்து நெல்லை லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் சென்றுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது வருமானத்தை மீறி ரூபாய் 90 லட்சம் அளவில் கூடுதல் சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த சொத்து, அவரது வருமானத்தைக் காட்டிலும் 424 சதவிகிதம் கூடுதல் ஆகும்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியராக இருக்கும் பகவதி, 15 வருடத்தில் இரண்டு முறை தனக்கு வந்த பதவி உயர்வினை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இதே பதவியில் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் மீது தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் வி.எம்.சத்திரம், ராம் நகர்ப் பகுதியில் உள்ள பகவதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் இன்று (நவ.30) அதிரடி சோதனை நடத்தினார்.
அந்த சோதனையில், பகவதி வருமானத்திற்கு அதிகமாகத் தனது மனைவி பெயரிலும், தன் பெயரிலும் சொத்துகள் சேர்த்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அரசு ஊழியர் பகவதி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஊழியராக இருக்கும் இவர் தனது வருமானத்தை விட 424% கூடுதல் சொத்து சேர்த்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:கனமழை எதிரொலி; எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகத்தைச் சூழ்ந்த மழை நீர்!