திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய மாவட்ட மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் நிஜாம் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து துரை வைகோ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பத்து வருடமாக எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல் மதிமுக இருந்து வந்துள்ளது. தற்போது மாநிலங்களவை தொடங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரை பல்வேறு பொறுப்புகளில் மதிமுகவினர் உள்ளனர்.
திமுக தலைமை மதிமுக மீதும் வைகோ மீதும் நல்ல மரியாதை வைத்துள்ளது. மக்களுக்கு மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு திமுக கூட்டணி மிக முக்கியமானதாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதெல்லாம் பகல்வேஷம். கர்நாடகா பாரதிய ஜனதா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுப்பதற்குத் தமிழ்நாடு பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.