தாமிரபரணி நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடி திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மாநகர பகுதியில் 18 பைபர் படகுகள் பொதுமக்களை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் 30 பைபர் படகுகள் வர உள்ளன என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் அளித்துள்ளார்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது. களக்காட்டில் 49 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது சுமார் 1100 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள வாகனங்கள் மற்றும் வீடுகளை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை (சாலை தெரு), மணிமூர்த்தீஸ்வரம், நெல்லை டவுன் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை பெல் ஸ்கூல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமிற்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ள மீட்பு பணிகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஐஏஎஸ், நாகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்தர்ரெட்டி, வருவாய் நிர்வாக இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் குளம் போல் காட்சியளிக்கிறது. ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பட்டத்தி மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த சிவக்குமார்(59) ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை: திருநெல்வேலி - தென்காசி இடையே போக்குவரத்து துண்டிப்பு!