தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் கனமழை.. உதவி எண்களை அறிவித்த மாவட்ட நிர்வாகம்! - சென்னை வானிலை ஆய்வு மையம்

Heavy rain alert for Tirunelveli: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லைக்கு அதி கனமழை எச்சரிக்கை
நெல்லைக்கு அதி கனமழை எச்சரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 1:58 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை போதுமான மழைப்பொழிவை கொடுத்துள்ளது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லாததால் பருவமழை முடிவுக்கு வரும் நிலையிலும், தற்போது வரை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு போன்ற அணைகள், அதன் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

திருநெல்வேலியில் கடைசியாக கடந்த வாரம் மிதமான மழை பெய்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியில் இன்று காலை முதல் டவுண் வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.

திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதியடைந்தனர். இதற்கிடையில், வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாஞ்சோலை, காரையாறு போன்ற மலைக் கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம், மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம், மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கோ, 1070 என்ற எண்ணில் மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கோ தெரிவிக்கலாம். மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் உடலுறுப்பு தானம் செய்த தமிழக மாணவன்..! திருநெல்வேலியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

ABOUT THE AUTHOR

...view details