நெல்லை: அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவில் பாறை சரிவு ஏற்பட்டு, அதில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். ஏற்கெனவே 4 நபர்கள் மீட்கப்பட்ட நிலையில் 5ஆவது நபரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவிற்குள் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவித்த நிலையில் தொடர் மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் என கூட்டாக பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து மண் மற்றும் கற்கள் சரிவு ஏற்பட்டதால் 5ஆவது நபர் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு பணியை நிறுத்திவிட்டனர். எனவே, மீட்புப் பணியில் 4ஆவது நாளாக ஈடுபட முயன்றபோது, காலை முதல் சாரல் மழை பெய்வதால் குவாரியில் பாறைகள் முழுவதும் மழைநீரில் நனைந்து காணப்படுவதால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மீட்புப் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.