திருநெல்வேலி:கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதானல் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.
இந்த அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நேற்று (நவம்பர் 28) இரவு நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இதேபோல தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள கடனாநதி அணையிலிருந்தும் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்தநிலையில் இன்று (நவம்பர் 29) பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 8,500 கனஅடி நீரும், கடனாநதி அணையிலிருந்து 1,700 கனஅடி நீரும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 91 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நெல்லை டவுன் - மேலப்பாளையம் இடையே தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆற்றுப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் அரசியல் நாடகமாடுகிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு