திருநெல்வேலி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது.
அதன்பின் தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா கூறுகையில்," தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை புரையோடியுள்ளது. இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி உள்ளனர். கலாச்சாரம் சீரழிந்து உள்ளது.
இதனை தடுக்கவும், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கட்டுபடுத்தவும் அரசு கடுமையான சட்டவிதிகளை அமல் செய்து இரும்பு கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்க
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். உள்நாட்டு வர்த்தகத்தை சீரழிக்கும் அனைத்து வர்த்தகத்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்க்கிறது.
வணிக நிறுவனங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபடும் போது தடை செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டும். விற்பனைக்கு அனுமதி உள்ள மற்ற பொருட்களையும் காவல்துறையினர் எடுத்துச் செல்கின்றனர் இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்மார்ட்சிட்டி பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்
மாநிலத்தில் பெருநகரங்களில் நடந்து வரும் மாற்று திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளை கடந்து நடந்து வருவதால் வியாபாரிகள் மட்டுமல்லாது வியாபாரிகளின் குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட காலத்திற்குள் ஸ்மார்ட்சிட்டி பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சாலை விரிவாக்கம் பணிகளின் போது பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரிய மைதானங்களில் காய்கறி சந்தைகள் மாற்றப்பட்டது. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் மீண்டும் பழைய இடங்களிலேயே கடைகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: குட்கா விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி!