நெல்லை: மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படும் போதை பொருளில்லா பாரதம் என்ற திட்டம் நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் பயன்படுத்துத்தல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் காணொலிக்காட்சி வாயிலாக ஆட்சியர் விஷ்ணு தலைமையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து Say No to Drug and Yes to Life அல்லது Drug Free India என்ற தலைப்பில் டிஜிட்டல் போஸ்டர் தயார் செய்வதற்கான மாதிரி படைப்புகள் தயாரிக்க மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சிறந்த படைப்புகள் அனுப்புவோருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் போதை தடுப்பு குழு கூட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது "மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .மேலும் கல்லூரி பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் போதை தடுப்பு குழு, என்ற அமைப்பு என்.எஸ்.எஸ், என்.சி.சி போன்று உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
மேலும் 14446, 1098 என்ற போதை தடுப்பு விழிப்புணர்வு எண்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளில் போதை தடுப்பு குழு அமைப்பு உருவாக்கப்படும் முயற்சி தமிழ்நாட்டிலேயே நெல்லை மாவட்டத்தில் தான் முதன் முதலாக தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியல் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், காவல்துறையினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: TNPL 2022: திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி - இரண்டு நாள்கள் லீவு...