திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகப் பரவி வருகிறது. ஒருநாளுக்கு சராசரியாக 600 முதல் 700 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மகேந்திரகிரி இஸ்ரோவில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த அலுவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் குழுவினர் வடிவமைத்துள்ள இந்த ட்ரோன் மூலம் வானில் பறந்தபடி கிருமிநாசினி தெளிக்கப்படும். அதிக நெரிசல் மிகுந்த நகர் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாததால் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் குழுவினர் பிரத்யேக ட்ரோன்களை தயாரித்துள்ளனர். பெட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், 16 லிட்டர் கிருமிநாசினியை வான் வழியாக தெளிக்கும் திறன் கொண்டது.