நெல்லை: தமிழ்நாட்டில் இன்று ஆயுத பூஜை மற்றும் நாளை விஜயதசமி பண்டிகை பொது மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்து கடவுளை வழிபட்டு வருகின்றனர்.
வழக்கமாக, ஆயுத பூஜையன்று கடை மற்றும் வணிக நிறுவனங்களில் திருஷ்டி கழிப்பதற்காக பெரிய அளவிலான பூசணிக்காயை சுற்றி, சாலையில் நடுவே உடைத்து விட்டுச் செல்வார்கள்; இதனால் பல்வேறு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உண்டு.
'திருஷ்டியைக் கழிக்க பிறரைக் காயமாக்க வேண்டாம்'
இந்தச் சூழ்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, நெல்லையில் நடுசாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் என்று மாநகர காவல் துறையினர், பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நீங்கள் கழிக்கும் திருஷ்டியால் மற்றவர்களைக் காயப்படுத்த வேண்டாம்; சாலையில் பூசணிக்காயை உடைத்து, விபத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நெல்லை மாநகர மக்களுக்கு காவல் துறை வேண்டுகோள் இதுகுறித்து நெல்லை மாநகர காவல் உயர் அலுவலர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 'வழக்கமாக பொது மக்கள் சாலைகளில் கண்டபடி பூசணிக்காய் உடைப்பதால் வாகனங்கள் அதில் சறுக்கி விபத்து ஏற்படுகிறது.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், வேறு எங்காவது சென்று பூசணிக்காய் உடைக்கும்படி, முடிந்தவரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்புச் செய்திகள்: அறநிலையத்துறை கல்லூரியில் பணி - இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி