நெல்லை: பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38ஆவது வார்டு செயலாளராக இருந்தவர் அபே மணி என்ற பொன்னுதாஸ் (38). நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பொன்னுதாஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர். பின்னர், பொன்னுதாஸின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூறாய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணை
இந்நிலையில், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொலைசெய்யப்பட்ட மணியின் தாயார் பேச்சியம்மாள் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார். இதற்கான நேர்காணலில் பேச்சியம்மாள் கலந்துகொள்ளவுள்ளார்.
எனவே நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின், உள்கட்சிப் பூசலில் ஏற்பட்ட மோதலால் நடந்த கொலையா அல்லது வரும் 1ஆம் தேதி பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை பொன்னுதாஸ் குத்தகைக்கு எடுக்கவுள்ள நிலையில், தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையா என்ற அடிப்படையில் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கொலை நடந்த 36 மணி நேரத்தில் காவல் துறையினர் ஏழு பேரை உடனடியாக கைதுசெய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அருண் பிரவீன் நெல்லை நீதிமன்றத்தில் நீதிபதி ஜெய் கணேஷ் முன்னிலையில் சரணடைந்தார்.