திருநெல்வேலி: நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல் பல மாதங்களாக இருந்து வருகிறது. மாநகரச் செயலாளராக சுப்ரமணியன் என்பவர், மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பால் நியமிக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் - அப்துல் வகாப் இருவரும் எதிரெதிர் அணியாக செயல்படத் தொடங்கினர்.
அதேநேரம், ஏற்கனவே மாவட்டச் செயலாளருக்கு எதிரணியாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜாவுடன் மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் கை கோர்த்ததாகவும், தற்போது இருவரும் சேர்ந்து மாவட்டச் செயலாளருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பால், 6வது வார்டில் கவுன்சிலராக வென்ற சரவணன் நெல்லை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வாய்ப்பு வழங்கியவர் என்ற முறையில் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை மேயருக்கு விதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேயரின் வீட்டு பத்திரத்தை வாங்கி வைத்து மிரட்டியதாகவும் பேசப்பட்டது.
ஒரு கட்டத்தில் மாவட்டச் செயலாளரின் நடவடிக்கைகளை பிடிக்காத மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்ததாகவும், இதனால் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக கோஷமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். மேலும், மேயரை மாற்றக் கோரி மாவட்டச் செயலாளர் ஆதரவு கவுன்சிலர் 30க்கும் மேற்பட்டோர் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மனு அளித்தனர்.
இதில் துணை மேயர் ராஜுவும் மாவட்டச் செயலாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். இதனிடையே மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியனுடன் மேயர் கைகோர்த்ததாக கூறப்பட்ட நிலையில், நெல்லை வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்பு மாவட்டச் செயலாளர் மற்றும் மாநகர செயலாளர் சுப்ரமணியன் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.