திருநெல்வேலி:நெல்லை கண்ணன், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என பன்முக திறமை கொண்டிருந்தவர் நெல்லை கண்ணன். இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாகப் பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். குறிப்பாகப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து, பொது மேடையில் அவதூறாகப் பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் நெல்லை மாவட்டத்திற்குரிய வட்டார மொழி வழக்கோடு பேசும் இவரது பேச்சு பலரையும் ரசிக்கும் வகையில் இருக்கும். பெருந்தலைவர் காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். தான் பேசும் அனைத்து மேடைகளிலும் காமராஜரைப் பற்றி பெருமையாகப் பேசுவார். மேலும் குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களைகளையும் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் நெல்லை கண்ணன் உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை கண்ணனின் நினைவாக நெல்லை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு, நெல்லை கண்ணனின் பெயரைச் சூட்டத் திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்திருந்தது.
இதுகுறித்து இன்று (ஜூலை 27) நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். திமுக ஆட்சியில் எப்படி நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை கொடுக்கலாம் என ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.