திருநெல்வேலி: நெல்லை மத்திய மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஆக.31) நெல்லை தச்சநல்லூர் பகுதி கழகச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
விழா மேடையில் திருச்சி சிவா பேசியதாவது, "தமிழக மக்கள் தங்களுக்கு வேண்டியதை கேட்காமலேயே பெறுகின்ற ஒரு நல்ல ஆட்சி நடந்து வருகிறது. திமுக மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரை கொண்டாடி வருகின்றனர். கலைஞர் 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் என தனது உழைப்பால் உயர்ந்தவர்.
அவர் எழுத்துக்கள், கடிதம், நாடகம், வசனம் என இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இந்திய அரசியலைத் தீர்மானிக்கின்ற ஒற்றைத் தலைவராகவும் கலைஞர் இருந்துள்ளார். தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பிறக்கவில்லை என்றால், நமது நிலை என்னவாக இருக்கும்?.. அவர்களால் தான் இன்று பலர் உயர்கல்வி, வேலை வாய்ப்பு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
இவர்கள் விட்டுச் சென்ற பணியை இன்று நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, ஓட்டுப் பெரும் கட்சியாக மட்டுமல்ல, சரித்திர மாற்றத்தை படைத்து, ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமூக நீதியை நிலைநாட்டும் இயக்கம். மருத்துவம் படிப்பதற்கு தற்போது 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், நீட் தேர்வு எழுத வேண்டும், இது இன்றைய நிலை.
ஆனால் ஒரு காலத்தில் மருத்துவம் படிக்க கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று சட்டமே இருந்தது. ஆனால் எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க முடியாது. இந்த நிலையை மாற்றி அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்பதை கொண்டு வந்த பெருமை நீதி கட்சியைச் சேரும். ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்படாத நிலை இருந்தது.