திருநெல்வேலி: தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் சி.எஸ்.ஐ நெல்லை திருமண்டலத்தின் அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த திருமண்டலத்தின் பேராயராக பர்னபாஸ் இருந்து வருகிறார். லே செயலாளராக ஜெயசிங் பதவி வகித்து வருகிறார். திருமண்டலத்துக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் என 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரி நிறுவனங்களுக்கு தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திருமண்டலத்தின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் திருமண்டலத்தில் பேராயர் பர்னபாஸ் தரப்பினர் ஒரு பிரிவாகவும், லே செயலாளர் ஜெயசிங் தரப்பினர் ஒரு பிரிவாகவும் பல மாதங்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக எம்.பி ஞானதிரவியம் லே செயலாளர் ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஞானதிரவியம் திருமண்டலத்தின் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனவே திருமண்டல நிர்வாகத்தை கண்டித்து எம்பி தரப்பினர் தொடர் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிஷப் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பரே நோபல் உள்ளிட்டோர் கூட்டாக திருமண்டல அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த எம்.பி ஞானதிரவியம் தரப்பினர், காட்பிரே நோபலை காலால் எட்டி உதைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து திருமண்டல அலுவலகம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவைகளை காரணம் காட்டி மூடப்பட்டது. இந்த விவகாரம் இருதரப்பு சார்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதனால், குற்ற விசாரணை சட்டம் பிரிவு 145 ன் கீழ் இரு தரப்பைச் சேர்ந்த தலா 16 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணை அதிகாரியான நெல்லை கோட்ட நடுவர் நீதிமன்றத்தில் கோட்டாட்சியர் (பொ) கார்த்திகாயினி இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் பேராயர் தரப்பினர் நெல்லை திருமண்டல அலுவலகத்தை திறக்க அனுமதி வழங்கியதுடன், பேராயரிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பேராயருக்கே திருமண்டலத்தில் முழு அதிகாரம் உள்ளது. எனவே அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
திருமண்டலத்தின் சகல குழுக்களையும், மண்டலங்களையும் தலைமை வகிக்க பேராயருக்கே உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. கோட்டாட்சியர் விசாரணையின் தீர்ப்பு பேராயருக்கு ஆதரவாக வெளியானதால், எம்.பி தரப்பினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.